ஆவணத் தொகுப்புகள் (Envelopes): LibreSign-இல் பல ஆவணங்களை ஒரே செயல்முறையில் கையொப்பமிடல்
LibreSign இப்போது ஆவணத் தொகுப்புகளை (Envelopes) ஆதரிக்கிறது. இதன் மூலம் பல ஆவணங்களை ஒன்றாகக் குழுவாக்கி, ஒரே கையொப்பமிடல் செயல்முறையாக நிர்வகிக்கலாம்.
ஒரு ஆவணத் தொகுப்பு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களை உள்ளடக்கிய தர்க்கரீதியான கொள்கலனாகும். இது பல ஆவணங்களுக்கு கையொப்பங்கள் தேவைப்படும் சூழல்களை ஒழுங்காகவும் வெளிப்படையாகவும் கையாள நிறுவனங்களுக்கு உதவுகிறது. எண்மக் கையொப்பச் சந்தையில் ஏற்கெனவே நிலைபெற்ற நடைமுறைகளுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆவணத் தொகுப்பு என்றால் என்ன?
ஆவணத் தொகுப்பு (Envelope) என்பது கையொப்பத்திற்காக ஒன்றாக அனுப்பப்படும் ஆவணங்களின் தொகுதியாகும். அந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே ஒருங்கிணைந்த கையொப்பச் செயலோட்டத்தின் பகுதியாகக் கருதப்படும்.
ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக நிர்வகிப்பதற்கு மாற்றாக, ஆவணத் தொகுப்பின் மூலம் பின்வருவன சாத்தியமாகின்றன:
- ஒரே கையொப்பக் கோரிக்கை
- எல்லா ஆவணங்களுக்கும் பொதுவான கையொப்பமிடுபவர்கள்
- அனைத்து ஆவணங்களின் முன்னேற்றத்தையும் ஒரே இடத்தில் காட்டும் கையொப்பமிடல் செயல்முறை
ஒரு தொகுப்பிலுள்ள எல்லா ஆவணங்களும் அதே கையொப்பமிடல் செயல்முறையின் பகுதிகளே; அவை தனித்தனி கையொப்பக் கோரிக்கைகளாகக் கருதப்படமாட்டா.
நிர்வாகக் கட்டுப்பாடு
LibreSign-இல் ஆவணத் தொகுப்புகளின் பயன்பாட்டை நிர்வாகிகள் முழுமையாக உள்ளமைக்கலாம்.
நிறுவன அளவில் இந்த அம்சத்தை இயக்கவோ முடக்கவோ முடியும். இதன் மூலம் பல ஆவணங்களுக்கான ஒருங்கிணைந்த கையொப்பச் செயலோட்டம் தேவையா என்பதை ஒவ்வொரு நிறுவனமும் தீர்மானிக்கலாம்.
ஆவணத் தொகுப்புகள் முடக்கப்பட்டிருந்தால், பயனர்கள் ஒரு ஆவணத்திற்கான கையொப்பக் கோரிக்கைகளை மட்டுமே உருவாக்க முடியும். இதனால் நிறுவனத்தின் உள்கொள்கைகள் அல்லது செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே இவ்வம்சம் பயன்படுத்தப்படும்.
ஆவணத் தொகுப்பைத் திருத்துவதும் நிர்வகிப்பதும்
ஒரு தொகுப்பை உருவாக்கிய பிறகு, அதன் பெயரையும் உள்ளடக்கத்தையும் LibreSign-இல் எளிதாக நிர்வகிக்கலாம்.
தொகுப்பிலிருந்து நேரடியாக ஆவணங்களைச் சேர்க்கவோ, நீக்கவோ, பார்க்கவோ முடியும். இதனால் கையொப்பமிடல் செயல்முறைக்கு முன்போ அதன்போதோ ஆவணத் தொகுதியைத் தேவைக்கேற்ப சரிசெய்யலாம்.
இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த ஆவணத் தொகுப்புக்கே பொருந்தும்; கையொப்பச் செயலோட்டம் முறியவோ மீண்டும் தொடங்கவோ செய்யாது.
சரிபார்ப்பும் வெளிப்படைத்தன்மையும்
LibreSign ஆவணத் தொகுப்புகளுக்குத் தெளிவான சரிபார்ப்புக் காட்சியையும் வழங்குகிறது.
தொகுப்பிலுள்ள ஒவ்வோர் ஆவணமும் தனக்குரிய எண்மக் கையொப்பங்களையும் சரிபார்ப்புத் தரவுகளையும் தக்கவைத்துக்கொள்கிறது. அதேவேளையில் அந்த ஆவணங்கள் ஒரே கையொப்பமிடல் செயல்முறையின் பகுதிகள் என்பதையும் சரிபார்ப்புக் காட்சி தெளிவுபடுத்துகிறது.
தனியுரிமைச் சார்ந்த அல்லது விளக்கமற்ற முறைகளை அறிமுகப்படுத்தாமல், ஆவணங்களுக்கிடையிலான தொடர்பைப் பயனர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் வெளிப்புற அமைப்புகள் புரிந்துகொள்ள இது உதவுகிறது.